டில்லி

கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பது குறித்து இரு காரணங்களை ஐ சி எம் ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முதல் அலை கொரோனா பாதிப்பில் 45 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.  குறிப்பாக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக அல்லது சிறுநீர் பாதை பாதிப்பு போன்ற நோய் உள்ளவர்கள் அப்போது கொரோனாவால் அதிக அளவில் மரணம் அடைந்தனர்.  அதற்கு நேர்மாறாக இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து ஐ சி எம் ஆர் இயக்குநரான மருத்துவர் பல்ராம் பார்கவா, ” இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் மருத்துவப் பணியாளர்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என அனைத்தும் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்த நிலையைப் பார்த்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் இளம் வயதினர் அதிக அளவில் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கான முதல் காரணம், இளம் வயதினர் வைரஸ் தொற்றுக்கு அதிகமான வாய்ப்பளித்து, வெளியில் அதிகமாக நடமாடுவது ஆகும்.  இவர்கள் எத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறிச் செல்வதால் பாதிக்கப்படுகிறார்கள்.

அடுத்ததாக தற்போது நாட்டில் நிலவுவது உருமாற்ற கொரோனா வைரஸ் பரவல் ஆகும் . உருமாற்ற கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரிப்பால் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதில் இளைஞர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.   அது மட்டுமின்றி வயதான பிரிவினரும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த இரு கொரோனா அலைகளிலும் 70 சதவீதம் நோயாளிகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். இது இளம் வயதினரைவிடச் சற்று அதிகரித்துள்ளது. , 2-வது அலையில் பாதிக்கப்படுவோரின் வயதில் பெரிதாக எந்த வித்தியாசமும் வரவில்லை. அதைப் போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களிலும் இரு அலைகளிலும் பெரிதாக மாற்றமில்லை.

உண்மையில் முதல் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9.6 சதவீதம் நோயாளிகள் உயிரிழந்தார்கள். 2-வது அலையில் 9.7 சதவீதம் நோயாளிகள் இறந்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.