சென்னை:
லைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் தேதி இரவு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆட்டோவில் வந்தபோது, வாகன சோதனை நடத்திய தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, வின்னேஷ் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.

காவல்துறையினரின் கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாகவே விக்னேஷ் உயிரழந்துள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானது எழுந்த நிலையில், இந்த கொலை வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் முதல்கட்டமாக விக்னேஷ் மரணத்துக்கு தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சந்தேகம் மரணம் என்று தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன்படி சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து நேற்றே விசாரணையைத் தொடங்கினர். நேற்றைய தினமே 9 காவலர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய 2 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.