கோயம்புத்தூர்
வீட்டை விட்டு ஓடி வந்த 10 வயது சிறுமிகள் இருவர் கோவை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் உள்ள நகரம் உடுமலைப்பேட்டை ஆகும். இது திருப்பூர் அருகே அமைந்துள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிகள் இருவர் தோழிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தங்கள் பெற்றோர்கள் தங்களிடம் பாசமாக இல்லாததாகக் குறை கூறி வந்துள்ளனர்.
இதையொட்டி இருவரும் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறி உள்ளனர். இருவரும் பேருந்து மூலம் கோவை நகருக்கு வந்துள்ளனர். தங்களிடம் இருந்த பணத்தை வைத்து கோவைக்கு பேருந்து பயணச் சீட்டை வாங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்த பணம் தீர்ந்து விட்டது. இதனால் இருவருக்கும் என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் இருந்துள்ளனர்.
இந்த இரு சிறுமிகளும் வெகு நேரமாகக் கோவை விமான நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு இருந்துள்ளனர். விமன நிலையத்தை கண்காணிக்கும் மத்திய பாதுகாப்புப் படையினர் இந்த இரு சிறுமிகளும் பள்ளிச் சீருடையில் வெகு நேரமாக அமர்ந்திருப்பதைக் கண்டு ஐயம் கொண்டனர்.
இந்த இரு பெண்களையும் அவர்கள் அழைத்து விசாரித்ததில் இவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரிய வந்துள்ளது. இந்த பெண்கள் இருவரும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறையினர் இந்த பெண்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் சிறுமிகளை ஒப்படைத்துள்ளனர்.