சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஏப்.28-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் இறுதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், கட்சி தலைமை பதவியை தொண்டர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை பழனிசாமி மாற்றியது செல்லாது என ஓபிஎஸ், கட்சியில் தொண்டர்களாக இருந்த ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.
இதற்கிடையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்யன், ஓபிஎஸ், புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரித்த நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், பெங்களூரு புகழேந்தி, ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில், அதிமுக விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை ஏப்.28-ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதில் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.