சென்னை:
சென்னையில் இரண்டு இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சென்னையில் மனித சோதனைக்குட்படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தமிழ்நாட்டின் 300 தன்னார்வலர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆரோக்கியமான தன்னார்வளர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும் எனவும், நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கோவிஷீல்ட் எனப்படும் இந்த தடுப்பூசியை பொது சுகாதார இயக்குனரகம் நிர்வகிக்கும் என்றும், இது சென்னை அண்ணா சாலையில் உள்ள இயக்குனராக அலுவலகத்தில் நடைபெறும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையை சார்ந்த மருத்துவர்கள் இணை ஆய்வாளர்களாக இந்த சோதனையை கண்காணிப்பார்கள் என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி எஸ் செல்வவினாயகம் இந்த திட்டத்திற்கான முதன்மை ஆய்வாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இந்த தடுப்பூசியின் மனித சோதனையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதைப்பற்றி ஸ்ரீராமச்சந்திரா நிறுவனத்தின் டீன் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளோம், தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியும் பாரத் பயோடெக் தடுப்பூசியும் மனித பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளோம்,  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி குறைந்தது 170 பெருக்காவது செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இந்தியாவின் 17 நகரங்களில் மனித பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு மொத்தம் 17,000 பேருக்கு செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.