சென்னை: தமிழக திரையுலக முன்னணி காமெடி நடிகரான பரோட்டோ சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி மோசடி செய்த படத்தயாரிப்பாளர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளைய தலைமுறை நடிகர்கள் நடிக்கும் படங்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளவர் காமெடி நடிகர் சூரி. கடந்த 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு மானாவாரியாக பரோட்டாக்களை சாட்பிட்டு, பிரபலமானதால் பரோட்டா சூரி என்று தமிழக மக்களால் அழைக்கப்படுகிறார். மதுரையில் உயர்ரக உணவகங்களையும் நடத்தி வருகிறார்.
இவரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சினிமா படத்தயாரிப்பாளர்கள் 2 பேர் ரூ. 2.70 கோடி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, சூரி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய அடையாறு காவல்துறையினர், ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் என்பவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை தர மறுத்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் போலீஸ் டைரக்டர் ஜெனரலுமான ரமேஷ் குடவாலா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் , ஆகியோர் நடிகர் சூரியை ஒரு நில ஒப்பந்தத்தில் 2.70 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.