சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்து இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு,தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் ஆயிரக்கணக்கில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல், கூட்டப்படுவதால், கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசியல் கட்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க, தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் சுதிர்குமார், ரோகிணி ஆகிய இருவர், தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் கொரோனாவுக்கு மத்தியிலும் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதுபோல, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பீகார்கள் மாநில அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.