சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 முக்கிய சாதனைகள் செய்துள்ளோம் என்றும், மழை காலத்தில் தூய்மை பணியாளர்களின் பணியானது பாராட்டுக்குரியது, மகத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறினார்.

தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 முக்கிய சாதனைகளை படைத்துள்ளோம். கொரோனாவை கட்டுப்படுத்தினோம், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். என்ன மழை பெய்தாலும் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்தோம். எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். பாராட்டு மழையில் நனைய காரணம் தூய்மை பணியாளர்கள்தான் எனவும் கூறினார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். இரவு பகல் பாராமல் அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் பணியாற்றினார்கள் எனவும் பாராட்டு தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள தடுப்புப் பணிகளிலும், மாண்டஸ் புயலின் போது சிறப்பாகப் பணிபுரிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஆணையர் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை சான்றிதழ் பெற்றனர்.

மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பருவமழையை கையாண்டது குறித்த ஆவணப்படத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பின்பு, மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்ன மழை பெய்தாலும் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்தோம். கடந்த முறை சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் எந்த இடத்திலும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முக்கிய சாதனைகளை படைத்துள்ளோம். கொரோனோவை கட்டுப்படுத்தினோம், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். மேயராக இருந்ததால் சென்னையில் ஒவ்வொரு வார்டும் எனக்கு தெரியும், ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும். ஒரு நிகழ்வு நடந்த உடனேயே அங்கே செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்ற உணர்வு ஏற்பட காரணம் கலைஞர்தான்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும், “துப்புரவு பணியாளர் என்ற சொல்லை தூய்மை பணியாளர் என்று மாற்றிவர் கலைஞர் தான். மழை, வெள்ள காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது, மகத்தானது. அனைவரையும் ஒருங்கிணைந்து எல்லோருக்கும் எல்லாம் என செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.