சென்னை: கொரோனா பற்றி ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ் குறித்தும், மக்கள் ஊரடங்கு பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 14 மணி நேரத்தில் வைரஸ் பரவாது, அழிந்துவிடும் என்ற பொருள்படும் வகையில் அவர் கருத்துகளை பேசி இருந்தார். அந்த வீடியோ தற்போது திடீரென டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
தங்களது விதிமுறைக்கு எதிரானது என்பதால் அந்த வீடியோவை நீக்கியதாக டுவிட்டர் நிறுவனம் கூறி இருக்கிறது. கொரோனா வைரஸ் 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம், எனவே மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தது தங்களது விதிமுறைக்கு எதிரானது, உண்மையில்லை என்று டுவிட்டர் கூறியிருக்கிறது.
கொரோனா தடுக்க ஊரடங்கு உத்தரவை ஆதரித்து ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே, டுவிட்டரும், பேஸ்புக் நிர்வாகமும் போலியான, உண்மைக்கு புறம்பான, அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளாத எந்த செய்தியையும், தகவலையும் ஏற்றுக் கொள்ளாது. தமது பக்கத்தில் அதுபோன்ற செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடாது என்பது குறிப்பிடத்தக்கது.