புதுடெல்லி:
ம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டிருந்த உலக வரைபடம் ஒன்று டுவிட்டர் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகள் பகுதியில் வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் புலந்ஷர் நகர காவல் துறையினர், டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது இ.பி.கோ பிரிவு 505(2) மற்றும் ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்த வரைபடத்தை டிவிட்டர் நிறுவனம் தனது வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இந்திய அரசின் புதிய டிஜிட்டல் சட்டங்களை டிவிட்டர் நிறுவனம் பின்பற்ற மறுத்து வருவதால், கடந்த ஒரு மாதமாக இந்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் மோதல் போக்கு தொடர்கிறது. டிவிட்டரில் வெளியான பதிவு ஒன்று பற்றி விசாரிக்க டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரியை, நேரில் ஆஜராக உத்தர் பிரதேச காவல் துறையினர் அனுப்பிய சம்மனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச காவல் துறை, மேல் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.