சென்னை:
முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல தோனி, உள்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர் பல அதிரடி மாற்றங்களை செய்தார் என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக ட்விட்டரில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டணம் கட்ட வேண்டும் என்றும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கட்டணம் என்றும் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டணம் கட்டாதவர்களின் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து சந்தா கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளில் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல தோனி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பலருடைய கணக்குகளில் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை ப்ளூடிக் என்பது இலவசமாக இருந்த நிலையில் தற்போது கட்டணமாக ஆக்கப்பட்டதை அடுத்து மேற்கண்ட நபர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சந்தா கட்டணம் கட்டினால் உடனடியாக அவர்களுக்கு ப்ளூடிக் வழங்கப்படும் என்றும் ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே பிரபலமானவர்கள் தங்களுடைய ப்ளூடிக் கணக்கை தொடர வேண்டும் என்றால் உடனடியாக சந்தா கட்ட வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் அவ்வப்போது ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தங்களுடைய முக்கிய விவரங்களை அதில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் எப்படி தங்களுடைய ட்விட்டர் கணக்கிற்கான ப்ளூடிக் சந்தா கட்டாமல் இருந்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் விரைவில் சந்தா செலுத்தி தங்களுடைய ப்ளூடிக் கணக்கை மீண்டும் பெற்று கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.