டில்லி
நேபாளத்தில் இந்தியப் பகுதிகளை இணைத்த புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் டிவிட்டரில் பதஞ்சலியைப் புறக்கணிப்போம் டிரண்ட் ஆகி வருகிறது.
நேபாள நாட்டில் சமீப காலங்களில் இந்தியா மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா எல்லையில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளில் சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சீன மற்றும் உலக நாடுகளில் இருந்து வரும் கொரோனா வைரஸை விட இந்தியாவில் இருந்து வரும் கொரோனா வைரஸ் அபாயகரமானது என நேபாள பிரதமர் கூறியது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் இந்தியப் பகுதிகளான லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்த வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவை ஆகும். இங்கு அமைந்துள்ள யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாலகிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் நேபாளத்தில் இருந்து போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாக புகார்கள் உள்ளன.
தற்போது நேபாள நாட்டின் மீது இந்திய மக்களுக்குக் கோபம் உள்ளதால் நேபாளப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்னும் டிரெண்ட் டிவிட்டரில் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் பதஞ்சலி நிறுவன தலைமை அதிகாரி நேபாளி எனக் கூறப்படுவதால் பதஞ்சலியைப் புறக்கணிப்போம் என்னும் ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.