அமெரிக்காவின் சாண்டா எப்.இ. பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றில் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்டுவின் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன், பட தயாரிப்பு குழுவுக்கும் ஒளிப்பதிவு குழுவினருக்கும் இடையே மோதல் இருந்து வந்த விவகாரமும், துப்பாக்கியில் நிஜ தோட்டா இருப்பது அலெக் பால்டுவின்-னுக்கு தெரியாது என்ற விவரமும் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அல்புக்யுர்க்யு என்ற இடத்தில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தள்ளியுள்ள போனான்ஸா நகருக்கு அருகில் உள்ள நீரோடையை ஒட்டிய பண்ணையில் ‘ரஸ்ட்’ என்ற பெயரில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று படமாக்கப்பட்டு வந்தது.
ரஸ்ட் புரொடக்சன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த சிறிய பட்ஜெட் படத்தை ஜோயல் சூசா இயக்க, அலெக் பால்டுவின் தயாரித்து நடித்திருந்தார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
அக்டோபர் 6 முதல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 21 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது, இந்நிலையில் 12 ம் நாள் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடிகர் அலெக் பால்டுவின் பயன்படுத்திய ‘சினிமா’ துப்பாக்கி சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார்.
ஹலினா ஹட்சின்ஸ் அருகில் நின்றிருந்த இயக்குனர் ஜோயல் சூசாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் விவரங்கள் தெரியவந்திருக்கிறது, “தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து பலமணி நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உரிய ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை” என்று தயாரிப்பு நிர்வாகிகளுக்கும் ஒளிப்பதிவு குழுவினருக்கும் ஏற்கனவே மோதல் இருந்தது தெரியவந்துள்ளது.
அல்புக்யுர்க்யு நகரில் தங்க வைக்கப்பட்ட படப்பிடிப்பு குழுவினர் தினமும் 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்ததாகவும், நாள்தோறும் 12 முதல் 13 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருந்ததாகவும் கூறியவர்கள்.
சம்பத்தப்பட்ட காட்சியை எடுப்பதற்கு முன் அலெக் பால்டுவினின் டூப்பை வைத்து ஒத்திகை பார்த்த போது, துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறியிருந்ததை தயாரிப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தோம், ஆனால் அவர்கள் இதுகுறித்து அசட்டையாக இருந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினர்.
1993 ம் ஆண்டு ப்ரூஸ் லீ மகன் ப்ரண்டன் லீ நடித்த ‘தி க்ரோ’ படத்தின் படப்பிடிப்பின் போது இதேபோன்றதொரு ‘சினிமா’ துப்பாக்கியால் சுட்டதில் ப்ரண்டன் லீ இறந்துபோனார், அதன்பின் சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எதுவும் ‘ரஸ்ட்’ படப்பிடிப்பின் போது பின்பற்றப்படவில்லை என்றும் காற்றிலும் புழுதிக்காட்டிலும் வேலை செய்வது சிரமமாக உள்ளதாக கூறிய ஒளிப்பதிவு குழுவில் இருந்த இருவரை சங்கத்தில் இல்லாத நபர்களை கொண்டு வெளியேற்றினார்கள் என்றும் ஒளிப்பதிவு குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இணை இயக்குனர்கள் “துப்பாக்கி நன்றாக இருக்கிறது என்று கூறியதாலேயே நான் அதை பயன்படுத்தினேன், அதில் நிஜ தோட்டா இருந்தது எனக்கு தெரியாது” என்று அலெக் பால்டுவின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சினிமா படப்பிடிப்பின் போது வெற்று தோட்டாக்கள் அடங்கிய டம்மி துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக நிஜ துப்பாக்கிகள் ஆகிய இரண்டும் பயன்படுத்த அனுமதி உள்ளது. டம்மி துப்பாக்கிகளின் பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்களும் சில நேரங்களில் சேதம் ஏற்படுத்த வல்லது.
ப்ரண்டன் லீ விவகாரத்தில் வெற்று தோட்டா அடங்கிய டம்மி துப்பாக்கியை பயன்படுத்தப்பட்டதாக படப்பிடிப்பு குழுவினர் கூறிய நிலையில், அவரது உடற்கூராய்வில் நிஜ தோட்டா பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.