சேலம்,

ரட்டை இலையை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கி தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

மேலும்,  மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது, தற்போதைய தேர்தல் கமிஷன் ஏற்கனவே குஜராத் அரசின் சீப் செகரட்டியாக இருந்தவர். அவர் மோடி அரசுக்கு சாதகமாகவே செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் ஆணையம், சாதிக் அலி ஜட்ஜ்மென்டை காரணம் காட்டி தீர்ப்பு வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம்  நடுநிலையாக செயல்படவில்லை.

ஏற்கனவே பல பொதுக்குழு உறுப்பினர்களின் அபடவிட் மோசடி செய்து இபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ளது குறித்து தேர்தல் கமிஷனில் தெரிவித்திருந்தோம். ஆனால், அதை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாமல், இறுதியில் விசாரணை செய்யப்படும் என்று கூறியது.  தற்போது அதை நிராகரித்து இருப்பது, தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கி உள்ளதை தெளிவாக்கி உள்ளது.

மார்ச் 22ந்தேதி அன்றுஎம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நேரத்தில், ஓபிஎஸ்  எங்களுக்கு எதிராக மனு கொடுத்ததை ஏற்றுக்கொண்டு நள்ளிரவில்  இரட்டை இலையை முடக்கியது. அதற்கு காரணமா என்ன?

தற்போதைய பிரச்சினைக்கு சாதிக் அலியின் ஜட்ஜ்மென்ட் ஒத்து வராது. நாங்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

மத்திய அரசின் விருப்பத்தின்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது மீண்டும்  ஊர்ஜிதமாகிறது.

ஏற்கனவே பன்னீருக்கு ஆதரவாக இருந்த மத்திய அரசு தற்போது, இபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்படுகிறது. பன்னீர் தற்போது திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.