சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்” என அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதம் வைரலாகி வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், இரட்டை தலைமைதான் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போதுள்ள 75 மாவட்டச்செயலாளர்களில், எடப்பாடிக்கு ஆதரவானவர்களே அதிகம் உள்ளதால், அதிமுக செயற்குழு, பொதுக்குழு குறித்த தீர்மானத்தில் எடப்படி வெல்லவே வாய்ப்பு உள்ளது. இதனால், அதிமுக கட்சி முழுமையாக எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

இந்த நிலையில், தற்போதுள்ள அதிமுக சட்டப்படி, கட்சிக்க ஒற்றைத் தலைமை வந்தால் அது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று ஓ.பி.எஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டால் சட்ட ரீதியாக என்னென்ன சிக்கல்கள் எழும் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு 4பக்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 11 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில், தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டைத் தலைமையின் பதவிக்காலம் முடிவதற்குள் பொதுக்குழுவால் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

மீறி செய்தால்,  தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

ஒற்றைத் தலைமை கொண்டு வரப்பட்டால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக்குறியாகும். இது, தமிழகம் முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தும் தூண்டுகோலாக அமைந்துவிடும்

ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பது உள்பட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.