சென்னை:

ரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் முடிவு சரிதான் என்று டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி இறந்ததை தொடர்ந்து அதிமுக சிதறியது. முதலில் இரண்டான அதிமுக பின்னர் 3ஆக பிரிந்தது. இந்த நிலையில், சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இந்த நிலையில்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரட்டை இலை கேட்டு இரு அணியினரும் மனு கொடுத்ததால்,   இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

பின்னர், உடைந்த அதிமுக ஒட்டப்பட்டு ஒன்றானது. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு விதிகள் திருத்தப்பட்டன. அதுகுறித்த ஷரத்துக்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை இணைந்த ஓபிஎஸ் இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதை எதிர்த்து, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது கடந்த மாதம் (பிப்ரவரி 2019) 28ந்தேதி டில்லி உயர் நீதி மன்ற நீதிபதிகள்   ஜி.எஸ்.சிஸ்டானி, சங்கீதா திங்கரா செஹல் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு வழங்கியது சரியே என்று தீர்ப்பு கூறி டிடிவியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், டில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், “தேர்தல் ஆணையம் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தனி சுயேட்சை சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.