சென்னை ,
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பலகட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரட்டை இலையை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெ.மறைவை யடுத்து, அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர் தலின்போது, ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாங்கள் தான் உண்மையான அதிமுக, தங்களுக்கே இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தேர்தல் கமிஷன் இரட்டை இலையை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைத்தது. அதைத்தொடர்ந்து இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அதைத்தொடர்ந்து அதிமுக செயற்குழு பொதுக்குழு கூடியது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, டிடிவி தரப்பினர் ஆட்சியாளர்களுக்கு எதிராக களத்தில் இறங்கினர். இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் பல கட்ட விசாரணை நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் கமிஷன் இன்று தனது முடிவை வெளியிடலாம் என டில்லி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது..
இதனால் கட்சி சின்னம் யாருக்கு கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.