டில்லி:
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை ஈபிஎஸ்,ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைப்பட்சமானது எனவும், ஆவனங்களை சரியாக விசாரணை செய்யாமல் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ளது. நாங்கள் எடுத்து வைத்த பல வாதங்களை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தேர்தல் ஆணை யத்தின் உத்தரவை ரத்து செய்து, தங்கள் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பிரமாணப் பத்திரங்களை உரிய முறையில் ஆய்வு செய்யவில்லை என குறறம் சாட்டினார்.
மேலும், கடந்த 1972-ம் ஆண்டு சாகித் அலி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கிற்கு பொருந்தாது எனவும், நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்த விளங்களுக்கு ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.