சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என சொல்லி கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13ந்தேதி  தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவரது முதல் தேர்தல் பிரசார பயணம்  திருச்சியில் இருந்து தொடங்க உள்ளதாகவும், சுமார் 10 வாரங்கள் (70 நாட்கள்)   மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கும் வகையில் தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

2026-ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள தமிழக  சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன. மேலும் நாம் தமிழர் கட்சி எப்போதும்போல தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதுடன், அக்கட்சி தலைவர் சீமான், மக்கள் சந்திப்பு மட்டுமின்றி, சமீப காலமாக கால்நடைகளை சந்தித்தும், மரங்களை சந்தித்தும் வாக்கு வேட்டையாடி வருகிறார்.

இதற்கிடையில், புதாக கட்சியை தொடங்கி உள்ள விஜய், ஆட்சியில் பங்கு என்று ஆசைக்காட்டி, சில கட்சிகளை தனது கட்சியுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தேர்தல் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறார்.  அதுதொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய்,  தமிழக வெற்றிக் கழக வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு தயாராகி வருகிறார்.   இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய், தேர்தல் பிரசாரம் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பூத் வாரியாக அமைக்கப்பட்டு வரும் கமிட்டிகள் பற்றியும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13-ம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு ‘மக்களுடன் சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட சுற்றுப்பயணம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் விஜய் ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முக்கிய நகரங்களில் விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளார். மேலும், முக்கிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி விஜய் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரசாரம் செய்வது போன்று, விஜய்யின் பிரசாரமும் பதிலடி பிரசாரம் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பஸ்சை அதிநவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ளனர். இந்த பஸ் சமீபத்தில் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சொகுசு வாகனத்தை விஜய் ஆய்வு செய்துள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட மாநில மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார். அனேகமாக இந்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மேற்கொள்ளும் முதல்கட்ட தேர்தல் பிரசாரப் பயணம் முடிவடைந்ததும், கொங்கு மண்டல மாநாட்டில் தீவிர கவனம் செலுத்துவார் என்று தெரியவந்துள்ளது.