சென்னை: ஜூலை 4ந்தேதி தவெக மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்து உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருவதுடன், தேர்தல் பணிகளையும் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலை சந்திக்கப்போவதாக அறிவித்துள்ள தவெக கட்சி தலைவர் விஜய், அதுதொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகிறார். ஏற்கனவே மாணவ மாணவிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. எனவே, கழகச் சட்ட விதிகளின்படி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள் / கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள். கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, கழகத் தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
