சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும், நெரிசலில் காயமடைந்தவர்களையும் தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு நடக்கிறது. கரூரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தவெகவினர் ஏற்பாடு செய்த பேருந்துகளில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

செப்டம்பர் 27ந்தேதி அன்று நடைபெற்று கரூர் தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கூட்ட நெரிசல் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகின. இதையடுத்து, உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக ஏற்கனவே அறிவித்தபட தலா ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். இதையடுத்து, விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயற்சி செய்தார்.
இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், த.வெ.க. சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. இதற்கு திமுக அரசும், செந்தில்பாலாஜியும்தான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும், விஜய் கரூர் சென்றால், அவரது பாதுகாப்பு தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்ததால், பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் பேசி ஆறுதல் கூற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னை அருகே மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுடன் தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணி அளவில் சந்தித்து பேசுகிறார். மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ்’ ஓட்டலில் நடைபெற உள்ளது. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து 5 சொகுசு பஸ்களில் 36 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சென்றனர். பின்னர் நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர். அவர்களை விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
இதற்கிடையில், 41 பேர் குடும்பத்தினரின் 8 குடும்பத்தினர் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது கருர் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு திங்கள்கிழமை 30-ஆம் நாள் என்பதால், காலையில் வழிபாடு செய்துவிட்டு சென்னையில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்து , இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மற்றவர்கள், கருர் அருகே உள்ள வெண்ணைமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகளில் சென்னை அழைத்த வரப்பட்டுள்ளனர். சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்களுடன் ஒவ்வொரு சொகுசு பேருந்துகளிலும் 4 மெய்காப்பாளா்கள்(பவுன்சா்கள்) இருந்தனா். மேலும், செல்லும் வழியில் யாருக்காவது ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால், அவா்களுக்கு முதலுதவி செய்யும் வகையில், பேருந்துகளுக்கு பின்னால் தவெக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் வேன் பின்தொடா்ந்து சென்றது.
இன்று 30-ஆம் நாள்: கரூா் சம்பவத்தின் 30-ஆவது நாளான திங்கள்கிழமை (அக்.27) பாதிக்கப்பட்டவா்களை தவெக தலைவா் விஜய் சந்திக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.