மதுரை: தொலைக்காட்சி தொடர்களில் வரம்புமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில்,  டிவி சீரியல்கள், விளம்பரங்களை தணிக்கை செய்ய வாரியம் அமைப்பது தொடர்பாக டிராய்க்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் அமைக்க உத்தரவிட கோரிய வழக்கு தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை சேர்ந்த ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்  தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான மனுவில், “தொலைக்காட்சி களில் தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை.  பல தொடர்களில்,  முறை தவறிய உறவுகள், பிறருக்கு கெடுதல் செய்வது, தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான வாழ்க்கை வழிமுறைகள் கற்பிக்கப்படு கின்றன. அதோடு சில நேரங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும், நடிப்பவர்கள் ஆபாசமாக உடை அணிந்து வரும் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன.

இதனால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படுவதற்கும் சீரியல்கள் காரணமாக அமைகின்றன. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டிவியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும். மேலும் அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே தொடர்கள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.” என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்  விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்து நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ர் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக, திரைப்படங்களுக்கு உள்ளதுபோல சின்னத்திரை நிகர்ச்சிகளை சென்சார் செய்ய சென்சார் போர்டு அமைக்கலாமா என்பது குறித்து,  மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.