இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்..  பொங்கும் சீரியல் தயாரிப்பு  கோஷ்டி

இன்றைய டிவி சேனல்களுக்கு சேட்டிலைட் சிக்னல்களை விட முக்கியமானதாக ஆகி விட்டது இந்த சீரியல்கள்.  ஆனால் கடந்த மார்ச் 20 முதல் கோரோனாவின் காரணமாக அரசு படப்பிடிப்புக்குத் தடை விதித்து விட, பெரும் அவதிக்குள்ளானது இந்த சேனல்களும், சீரியல்களுக்கு அடிமையாகிப்போன நம் ஊர் பெண்களும் தான்.

தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துவிட்டாலும், அவர்கள் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால்

சம்பந்தப்பட்டவர்கள் இதைப் பெரிதாகக் கொண்டாடும் நிலையில் இல்லை.  “20 பேருக்கு மேல இருக்கக்கூடாது.  கேமரா முன்னால நிக்கிறவங்க தவிர மத்த எல்லாரும் மாஸ்க் போட்டிருக்கணும். உபயோகிக்கிற வாகனங்களுக்கு சானிடைசர் தெளிக்கிறதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்கள்.  ஒரு சீரியல் எடுக்க ஆர்ட்டிஸ்ட் இல்லாம குறைஞ்சது 75-லருந்து 90 பேர் வரை ஆட்கள் தேவை.  வெறும் 20 பேரை வெச்சு எடுக்கணும்னா பழைய தூர்தர்சன் சீரியல் மாதிரி கேமராவை ஒரே எடத்தில வெச்சிட்டு நடிகர்களை வந்து டயலாக்கை பேசிட்டு போக சொல்ல வேண்டியதான்.  அதான் முடியும்” என்கிறார் ஒரு தயாரிப்பாளர் கோபமாக.

தற்போது கிட்டத்தட்ட 40 சீரியல்கள் வரை தயாரிப்பில் இருக்கின்றன.  டெக்னீசியன், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு 125 பேர் வரை இதை நம்பி பிழைச்சிட்டு இருக்காங்க.  ஆர்ட்டிஸ்ட் ஊதியம் தவிர்த்து ஒரு நாளைக்கி ரூ. 60,000/-லிருந்து ரூ. 80,000/- தயாரிப்பு செலவு ஆகுது.  நடிகர்கள் அஞ்சு பேர் இருந்தாலே லைட்டிங் செட் பண்ண, டிராலி மூவ் பண்ண, உணவு பரிமாறுதல்னு ஆட்கள் நிறைய தேவைப்படுவாங்க.  அரசாங்கத்தை போய் சந்திச்ச எங்க நிர்வாகிகள் இதை பத்தியெல்லாம் தெளிவா சொல்லி புரிய வெச்சிருக்கணும்.  அது பத்தி முடிவு எடுக்காம நாங்க ஷூட்டிங் ஆரம்பிக்க போறதில்ல” என்கிறார் ஃபெஃப்சி செயலாளர் அங்கமுத்து சண்முகம்.

ஆனால் பிரபல சீரியல் தயாரிப்பாளரும், நடிகையுமான ராடான் மீடியா ராதிகா,            “இப்போதைக்கு இந்த அனுமதி பெரிய விசயம் தான்.  முதல்ல இருக்கிறத வெச்சு ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டு, பிறகு இதிலுள்ள சிக்கல்கள் பத்தி பேசி சரி பண்ணிக்கிறது தான் ஒரே வழி.  ஏன்னா இதை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்குதே” என்கிறார் மிகவும் பாசிட்டிவாக.

எது எப்படியோ, சீரியல் ரசிகர்கள் பழைய சீரியல்களைத்தான் பார்த்து தீர வேண்டும் என்கிற அவஸ்தை இனி இல்லை.

– லெட்சுமி பிரியா