டில்லி,
தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க தேவையில்லை என்று கூறினார் மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு. மேலும் ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் கறுப்பு பணத்தை தவிர நாட்டில் வேறு எதுவும் முடங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது டில்லியில் நடைபெற்று வரும் பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில் பேசும்போது இதை குறிப்பிட்டார்.
டில்லியில் பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில் பேசிய வெங்கையாநாயுடு, கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை வரலாற்று சாதனை.  இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. நாட்டின் பொருளாதார நலன் கருதியே அரசு இந்த துணிச்சலான முடிவை எடுக்கப்பட்டு உள்ளது.
ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றது திடீரென வந்த அறிவிப்பாகவும், நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் நீண்ட நாளைய செயல் திட்டம். இந்த அதிரடி நடவடிக்கையை சில சுயநல விரும்பிகள் தான் எதிர்ப்பார்களே,  தவிர மற்ற அனைவரும் பாராட்டி உள்ளனர்.
venkai
கறுப்பு பணத்தை தவிர, பஸ்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்தும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மற்றபடி எதுவும் முடங்கவில்லை என்றார்.
மேலும்,  இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்துள்ளோம்.
டி.வி.சேனல்கள்,  தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் சிரமங்களை ஒளிபரப்பு வதில் தவறில்லை. அதே சமயம் அந்த சிரமங்களை மட்டும் காட்டுவது நல்லதல்ல என்றார்.
வரும்  டிசம்பர்  மாதம்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு நடக்கும் என அறிவித்து உள்ளார்.