சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என சித்ராவின் தந்தை மனு அளித்துள்ளார்.

கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சின்னத்திரை நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகை சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது.

சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

”விரைவில் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும்கூட, விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கு, குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருக்கிறது.   எனக்கு முதுமை காரணமாகத் திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது.  வழக்கில் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், சித்ராவின் வழக்கைத் திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும்.”

என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் இந்த மனு விசாரணை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.