சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தன் எனவும் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார்.அவரது இறுதி சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
78 வயதான பெரியசாமி உடல்நலக்குறைவினால்கடந்த சில நாட்களாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தைச்சேர்ந்தவர் என்.பெரியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி காலகட்டத்தின்போது, திமுகவுக்காக மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1986 ம் ஆண்டு தூத்துக்குடி நகராட்சி தலைவராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது மகளான கீதா ஜீவன் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே, உடல்நலம் குன்றியிருந்தார் பெரியசாமி. அவருக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது உடல், தூத்துக்குடிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.