சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைந்துள்ளது. மேலும் பலபேரை சுட்டுக்கொன்ற சுடலைக்கண்ணு என்ற போலீசார்மீது கடுமையாக சாடியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறைக்கள மானது. இதையடுத்து போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System (அ) நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளது.
போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனவும், கலவரம் நடந்து கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரில் இல்லை எனவும் அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் எந்த விதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால்தான் அங்கு பிரச்சினை வன்முறையாக மாறி உள்ளது.
போராடிய போராடடக்காரர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்திய, சுடலை கண்ணு என்ற போலீசார் காட்டில் விலங்குகளை வேட்டையாடுவது போல போராட்டக்காரர்கள் சுட்டுத்தள்ளியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளதுடன், சுடலைக்கண்ணு சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்து கொண்டிருந்த காரணத்தால் இவ்வாறு சுட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்க லாம். புத்திசுவாதீனம் இல்லாதவர் போல் இப்படி நடந்துகொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல என்று அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக எண்ணி காவல்துறை யினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர்
மேலும், துப்பாக்கி சூடுக்கு காரணமான அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர் என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி…..