தூத்துக்குடி:

தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக  தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவைகளை முடக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நேற்று  நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேர்களை கொன்று குவித்துள்ளனர். மேலும் இன்று ஒருவரையும் போலீசார் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது வரை தூத்துக்குடியில் பதற்றம் நிலவி வருகிறது.

தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி பகுதியில் நிலவும் பிரச்சினை மற்றும் நிலவரம் குறித்து செய்திகள் வெளியிட தமிழக ஊடகங்களுக்கு தடை விதித்துள்ள இபிஎஸ்,ஓபிஎஸ் அரசு தற்போது சமூக வலைதளங்களையும் முடக்க உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் இணையதள சேவைகளை முடக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வன்முறைக் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் இணையதள சேவைகளை 3 மாவட்டங்களில் முடக்க தமிழக உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று மே-23-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரையில் 5 நாட்கள் மொபைல் போனிலும் இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.