தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பிளஸ்1 மாணவர்கள் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர்களை குத்திய 9 வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்தூக்குடி அருகே உள்ள பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேல்படிப்பாகவும், உயர் படிப்புக்காவும் தூத்துக்குடிக்கு தினசரி பேருந்தில் வந்து செல்கின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம்  முள்ளக்காடு  பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் பொன்திவாகர் (வயது 17), பாலகிருஷ்ணன் மகன் அரவிந்த் (வயது 17). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்1  படித்து வருகின்றனர்.

கத்திகுத்தில் காயமடைந்த மாணவன்
கத்திகுத்தில் காயமடைந்த மாணவன்

அதேபோல், முள்ளக்காடு ராஜீவ்நகரை  முத்துராஜ், முனீஸ்வரன், முத்து மாரியப்பன், திருப்பதி ஆகிய நான்கு பேரும் பீச் ரோட்டில் உள்ள ஒரு  பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த இரு பள்ளி மாணவர்களுக்கு இடையேயும் பஸ்சில் உட்கார இடம் பிடிப்பது குறித்து அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டாம். நேற்று மாலை இரு பள்ளி மாணவர்களும் பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக மோதிக் கொண்டார்களாம். அவர்களை பஸ் கண்டக்டர் சமாதானம் செய்து அனுப்பி வைத்த தாக தெரிகிறது.
இன்று காலை வழக்கம்போல கோவங்காடு என்ற பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. பஸ்சில் அந்த பகுதியை சேர்ந்த கிராமத்து மாணவர்கள் ஏறி வந்தனர். அப்போது ஏற்கனவே  நடைபெற்ற மோதல் காரணமாக இரு பள்ளி மாணவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது 9 வகுப்பு மாணவர்களான முத்துராஜ், முனீஸ்வரன், முத்து மாரியப்பன், திருப்பதி ஆகிய நால்வரும் சேர்ந்து, முத்தையாபுரம் அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே பஸ் சென்றுகொண்டிருந்த போது தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென பிளஸ்1 மாணவர்களான  திவாகர் மற்றும் அரவிந்தை கத்தியால் குத்திவிட்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடி முயன்றனர்.
இதைபார்த்த சகபள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் அலறினர். இதையடுத்து பஸ் டிரைவர் பாதியிலேயே பஸ்சை நிறுத்தினார். உடனே பயணிகள்  அனைவரும் சேர்ந்து, கத்தியால் குத்திய அந்த மாணவர்களை  மடக்கி பிடித்ததனர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் உடனே அருகிலுள்ள முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் கத்திக்குத்தில் காயம் அடைந்த 2 மாணவர்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார் பிடிபட்ட 4 மாணவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சிறு தகராறில் கத்திகுத்து வரை சென்றிருப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.