டில்லி

ந்தியாவில் இருந்து வந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் உள்ளதாகக் கூறி துருக்கி திருப்பி அனுப்பி உள்ளது.

சர்வதேச அளவில் அதிகமாகக் கோதுமை விளைச்சல் உள்ள உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 மாதங்களாகப் போர்  நடந்து வருகிறது,   எனவே உலகெங்கும் கோதுமைக்கு கரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உணவுப் பொருட்களின் கையிருப்பு அதிகமாக உள்ளது.

எனவே உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை அனுப்பத் தயாராக இருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது.  அதே வேளையில் இந்தியாவில் கோதுமையின் விலை உயர்ந்து வருவதால், அதன் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது.

ஆயினும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து கோதுமையை அனுப்பி வருகிறது.  அவ்வகையில் துருக்கி நாட்டுக்கு இந்தியக் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.  இந்த கோதுமையை ஏற்கத் துருக்கி அரசு  மறுத்துள்ளது.

இந்தியக் கோதுமையில் பைட்டோசானிட்டரி இருப்பதாகவும்,  ரூபெல்லா வைரஸ் தொற்று இருப்பதாகவும் அந்த நாடு பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளது. அதனால் இந்தியா அனுப்பிய  கோதுமையை மீண்டும் திருப்பி அனுப்ப துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.