அங்காரா:
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே நேற்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள நகரங்களின் பல கட்டடங்கள் குலுங்கின. 10 மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  பல இடங்களில் கட்டிங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.  பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினர்.  கட்டிட இடிபாடுகளில் ஏரானமானோர் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்பதற்காக துருக்கி – சிரியாவின் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் 3600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.