துருக்கியில் ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சி காரணமாக, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக 3 முன்னாள் தூதர்களை அதிரடியாக கைது செய்துள்ளது துருக்கி அரசு.
துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவ புரட்சியை, ராணுவத்தின் மற்றொரு பிரிவினரும், போலீசாரும், பொதுமக்களும் இணைந்து முறியடித்தது நினைவிருக்கலாம்.
இது சம்பந்தமாக 2,800 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் சுமார் 265 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து துருக்கி அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து, ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்ததாக, முன்னாள் அதிபர் அப்துல்லா குல்லின் ஆலோசகர் உட்பட 3 முன்னாள் தூதர்களை துருக்கி அரசு அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.