சென்னை,
தமிழகத்தில் இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நெருக்கமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஜெயா டிவி சிஇஓ வீட்டில் சோதனை செய்து வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய உணவு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அதை காண்பிக்க கூறி, டிடிவி ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். பின்னர் அந்த உணவை சோதனையிட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். அதுபோல சென்னை மகாலிங்கப்புரத்தில் உள்ள ஜெயா டிவியின் சிஇஓ விவேக் வீட்டிலும் காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, சோதனையின்போது ஏதும் கிடைக்காது என்றும், வருமான வரித்துறையினர் எதையாவது வைத்துவிட்டு எடுத்தால் உண்டு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஊழியர் ஒருவர் மதிய உணவு வாங்கிச் சென்றார். இதைக்கண்ட டிடிவி ஆதரவாளர்கள், அந்த உணவை காண்பித்து செல்லும்படி வலியுறுத்தினர்.
அதையடுத்து அந்த ஊழியரிடம் இருந்த உணவு பொட்டலங்களை பிரித்து, அதனுள் ஏதேனும் இருக்கிறதா என சோதித்து பார்த்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதிகாரிகளின் உணவை தினகரனின் ஆதரவாளர்கள் சோதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.