சென்னை: 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகத்திற்கு வருவோம்  டிடிவி தினரகன் சசிகலா தமிழகம் வருகை குறித்து பெங்களூரில் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சசிகலா, டிடிவி தினகரன் மீது, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் காவல்துறை டி.ஜி.பி திரிபாதியை சந்தித்து  புகார் கொடுத்துள்ளனர்.

4ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா 8ந்தேதி தமிழகம் வருகிறார். அவருக்கு பெரும் வரவேற்பு கொடுக்கும்  அமமுக கட்சி,  சென்னையிலும் 12 இடங்களில் வரவேற்பு மற்றும் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்தது. அதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர்களது மனுவை காவல்துறை நிராகரித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர். டி.ஜி.பி. திரிபாதி அலுவகத்திற்கு சென்ற, அதிமுக மூத்த நிர்வாகிகள், அவைத்தலைவர் மசூசூதனன் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீது மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் மற்றும் அவை தலைவர் மதுசூதன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது,  சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், ”டிஜிபியிடம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொடுத்தோம். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு உரிமை இருப்பதாக கூறியிருந்தார். அதற்காக மனு கொடுத்தோம். தற்போது, பெங்களூருவில் ஊடகத்தில் பேசியுள்ள சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள், அவர்களில் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகம் வரப்போவதாக கூறியுள்ளார்கள். அவர்கள் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்களால் பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட இருக்கிறார்கள். அவர்கள் தீட்டியுள்ள சதித் திட்டத்தை தடுக்க வேண்டும் என கூறினார்.

இரு தினங்களுக்கு முன்பு சசிகலா, நான் தான் அதிமுக, கொடியை பயன்படுத்த எனக்கு உரிமை இருக்கும் என்று மனு கொடுத்துள்ளார். அந்த உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டது  இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்டுவிட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம் என தீர்ப்பு வந்துள்ளது.  அதோடு அந்த சின்னத்தில் இடைத் தேர்தலில் போட்டியிட்டோம்.

அதனால்,  சசிகலா இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும். அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதால் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம்,” என்றார்

ஆளும் கட்சி, எதிர் கட்சி, அம்பானி,  பிரதமர், முதல்வர், சாதாரண வார்டு கவுசிலர் யாராக இருந்தாலும் சரி, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சட்டப்படி யாரிடம் மனு கொடுக்க வேண்டுமோ, அவர்களிடம் கொடுத்துதான் ஆக வேண்டும். நேரடியாக யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

நான்கு ஆண்டுகாலம் இந்த அரசு அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறோம். இரண்டு இடைத்தேர்தலிலும் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம் எனவே அதிமுகவை யாரும் உரிமை கொண்டாட முந்தியது. அது முதல்வர், துணை முதல்வர், அவை தலைவருக்கு சொந்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.