பரமக்குடி:

திமுகவுடன் அமமுக ஒருபோதும் இணையாது, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து பேச குழுக்கள் அமைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாஜக ஆதரவு கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்  ராம்தாஸ் அத்வாலே நேற்று புதுச்சேரி வந்திருந்தார். இவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்தால், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து  பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும் எனவும் ராம்தாஸ் அத்வாலே கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் அத்வானியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டிடிவி,  அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிரடியாக கூறினார்.

அவர்கள் எதை வேண்டுமானாலும் விரும்புவதாக சொல்லட்டும். இத்தகைய விஷயங்கள் ஒருபோதும் நடக்காது,  ராம்தாஸ் அத்வாலே போன்றவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்கிறார் கள். அவர்கள் நினைப்பதெல்லாம் ஒரு போதும் நடக்காது. அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரவும் மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக  தென் மாவட்டங்களின் அ.ம.மு.க. வின் தகவல்-தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரன் பேசுகையில், “அ.ம.மு.க. சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே மதவாத சக்திகளுடன் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம்” என்று பேசினார்.