திருவண்ணாமலை:

“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக்கள் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளன. அவரது மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும்” என்று அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

தினகரன் மேலும் பேசியதாவது:

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர்செல்வத்தை நான் அறிமுகப்படுத்தி பெரு்ம் தவறு செய்துவிட்டேன்.   ஜெயலலிதா மறைந்தவுடன்,  ஓ.பன்னீர்செல்வம் எதிரிகளோடு சேர்ந்து அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டார்.

ஓ.பி.எஸ். – தினகரன்

அவர் பசுத்தோல் போர்த்திய புலி.  அவர் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறவே இல்லை. ஆனால் அவரிடமிருந்து  முதல்வர் பதவி பறிக்கப்பட்டவுடன், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்.

சி.பி.ஐ. விசாரணை நடத்துவது குறித்து  எங்களு்க்கு கவலையில்லை. எங்கள் மடியில் கனமில்லை. அதனால் எங்களுக்கு பயமில்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

பெரியகுளத்தில் சாதாரண ஆளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது பிரதமரை சந்திக்க விமானத்தில் போய் வருகிறார். அவரது மகன்கள், மருமகள்கள், உறவினர்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார்கள். அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் பலமடங்கு உயர்ந்துள்ளன.  இது குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும்” என்று டி.டி.வி. தினகரன் பேசினார்.