சென்னை

எம் பி பென்ஷன் பணத்தில் தான் தாம் வாழ்க்கை நடத்துவதாக டி டி வி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களான திவாகரன், தினகரன், பாஸ்கரன் ஆகியோரின் வீடு, ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 190-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.   இது தவிர நமது எம் ஜி ஆர் பத்திரிகை அலுவலகம், அதிமுக பிரமுகர் பூங்குன்றன் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடைபெறுகிறது

இந்த சோதனைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “என் வீட்டில் வருமான வரித்துறை எந்த சோதனையும் நடத்தவில்லை. ஒரு அதிகாரி வந்து விட்டு. சிறிது நேரத்தில் சென்றுவிட்டார். எனது இல்லத்தின் முன்பு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம்  இங்கு ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. எனது இல்லத்துக்கு வந்த அதிகாரி யார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது.

புதுச்சேரி ஆரோவில் பகுதியைத் தாண்டி, எனக்குச் சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. அங்கு சோதனை நடைபெற்றுவருகிறது. யாரால் ஏவி விடப்பட்டு இவர்கள் சோதனை நடத்திவருகிறார்கள் என்று தெரியவில்லை.   நான் எதையும் சந்திக்கத் தயார்.  இப்போதுதான் பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது. சசிகலாவையும் என்னையும் ஒடுக்க எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த சோதனைகள் போல இப்போதும் நடக்கிறது.. இதையெல்லாம் நான் கடந்த 30 வருடங்களாக பார்த்துவிட்டேன்.

இவர்கள் 25 வருஷம் ஜெயிலில் போட்டாலும் எனக்குக் கவலை இல்லை.  நான் ஏற்கெனவே திகார் ஜெயில் வரை பார்த்தவன்.  பொதுச்செயலாளர் சசிகலா இங்கே இல்லை. அதனால் கட்சி நடக்கவில்லையா? சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினோம்.  எங்களிடம் உள்ள இரண்டு கோடி தொண்டர்கள் ஆதரவுடன் கட்சி எழுச்சியோடு நடக்கும்.

நான் இன்னும் எனது எம்.பி பென்ஷன் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறேன். எனது மனைவி தான் பிஸினெஸ் நடத்துகிறார். அதுபற்றி வருமான வரித்துறை கேள்வி கேட்டால் என் மனைவி பதில் சொல்வார். ஒரு கட்சியை அழித்து இன்னோரு கட்சி வளர முடியாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை பி.ஜே.பி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். நான் இல்லாவிட்டாலும் ஒரு சாதாரண தொண்டன் கட்சியை நடத்துவான். இந்த சோதனை என்ற பூச்சாண்டி எங்களிடம் எடுபடாது” என்று எச்சரித்தார்.