டி.டி.வி. தினகரனை முன்னிலை படுத்தினால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக (அம்மா) கட்சியின் நிலைபாட்டை ஏற்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலாவை, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சற்று நேரத்துக்கு முன் சந்தித்தார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள்,”எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தினகரன் தலைமையில்தான் நடத்த வேண்டும் தினகரனை கட்சியில் முன்னிலைப்டுத்த வேண்டும். அப்போதுதான், குடியரசு தலைவர் தேர்தலில் கட்சி ஆதரவு நிலையை நாங்களும் ஏற்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை, மத்தியில் ஆளும் பாஜகவுக்கே குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளார். அவர் மட்டுமின்றி அதிமுக பொறுப்பில் உள்ளவர்கள் அனைவருமே பாஜக ஆதரவு நிலையையே எடுத்திருக்கிறார்கள்.
சிறைத்தண்டனை பெற்றும்கூட தினகரனும் இதுவரை பாஜகவை எதிர்த்து பேசியதில்லை. இந்த நிலையில் பொறுத்தது போதும் என்று தினகரன் முடிவெடுத்துவிட்டார் என்பதையே அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் செயல்பாடு வெளிப்படுத்துகிறது. குடியரசு தலைவர் தேர்தல் மூலம் மத்திய பாஜக அரசுக்கு டிடிவி தினகரன் செக் வைத்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.