சென்னை: ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலாவை நீக்கி, இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வருக்கில், இருந்து, விலகுவதாக  டி.டி.வி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவைத் தொடர்ந்து, சசிகலா கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயன்றார். இதனால் அதிமுக உடைந்தது. இதற்கிடையில், சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்ததால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இணைந்த அதிமுக, கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி, சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கியதுடன், பொதுச்செயலாளர் என்ற பதவியே இனிமேல் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர்  அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில்,   அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாகவும், சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம்  தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, வங்கிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையின்போது,  இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர் இந்த வழக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சசிகலா, டிடிவி தினகரன் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், ஏற்கனவே தேர்தல் ஆணையம் இந்த மனுவை நிராகரித்ததாகவும் அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது டி.டி.வி தினகரன் அமமுக என்ற கட்சியை  தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது மனுவை திரும்ப பெறுவதா என்பது தொடர்பாக சசிகலாவிடம் தகவல் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.