சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திகார் சிறையில் இருந்து விடுதலையான தினகரன் தற்போது பெங்களூர் சென்று கொண்டிருக்கிறார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமின் பெற்ற டிடிவி தினகரன் திகார் சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவர் சென்னை வந்தார்.
ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த தினகரன், சிறை வாசத்திற்கு பிறகு, தான் கட்சியிலேயே நீடிப்பதாகவும், அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளராக நீடிப்பதாகவும் கூறி அமைச்சர்களிடையே கிலி ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், அவரது சித்தியும், கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலாவை பெங்களுர் சிறையில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவர் இன்று காலை பெங்களூர் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு ஆதரவாக தங்கதமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமம் ஆகிய 3 எம்எல்ஏக்கள் நேற்றே இரவே பெங்களூர் புறப்பட்டு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கும் தினகரன், அவரிடம் தனது திகார் சிறைவாசம் குறித்தும், தமிழக தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிப்பார் என கூறப்படுகிறது.
அவர் பெங்களூரு சென்று திரும்பிய பின்னர் அதிமுகவில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.