சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 17 பேர் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலையை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இன்று அவர், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திக்க இருக்கிறார்.
முன்னதாக, தான் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவேன் என்றும் இது குறித்து சசிகலாவிடம் ஆலோசனிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன், கட்சியில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்ததை அடுத்து அ.தி.மு.க.வில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இடையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கட்சிப்பணிகளில் ஈடுபட தினகரனுக்கு முழு உரிமை உண்டு” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தினகரனுக்கு எதிரான அமைச்சர்கள், ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல் பரவியுள்ளதை அடுத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.