சென்னை:

நீட் தேர்வு எழுத  கேரளா செல்லும் மாணவர்களுக்கு  டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதவு முன்வந்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கிராமப்புற ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டு மென்று நம்முடைய கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே குரல் கொடுத்தன. ஆனாலும் மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை. மாநில அரசும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இந்தப் பின்னணியில் மிகுந்த மனவேதனையில் நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் தயாராகி வந்த நேரத்தில், அவர்களில் பல நூறு பேருக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து அவர்களின் வேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு.

இவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுதுவது கடினம் என்பதை, நேரக் குறைவை காரணம் காட்டி ஏற்க மறுத்திருக் கிறது உச்ச நீதிமன்றம். இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசும் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது என்றாலும் இந்த தேர்வுக்கு அந்த மாணவர்களையும் தயார்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

அந்த வகையில் கேரள மாநில மையங்களில் அதிகளவில் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக சில ஏற்பாடுகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்திருக்கிறோம்.

அந்த அடிப்படையில் கேரள மாநிலத்திலுள்ள கீழ்க்காணும் தேர்வு மையங்களுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு தேவைப்படுமெனின் தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆலப்புழா தேர்வு மைய எண் 5059, எர்ணாகுளம்-5060, கன்னூர்-5061, கோழிக்கோடு-5064, மலப்புரம்-5065, பாலக்காடு-5066, திரிச்சூர்-5067 ஆகிய தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பொற்காலராஜா, ராகேஷ் ஆகியோரை 93631 09303, 99942 11705 என்ற எண்ணிலும், திருவனந்தபுரம்-5068, கொல்லம்-5062, கோட்டயம்-5063 ஆகிய இடங்களில் தேர்வு எழுது பவர்கள் பாப்புலர் வி.முத்தையாவை 89034 55757, 73738 55503 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

நீட் தேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ.யின் நடவடிக்கைகள் என்பது மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கின் பிரதிபலிப்புதான். தேர்வு நடைமுறைகளெல்லாம் கணினி மயமானது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் சி.பி.எஸ்.இ.க்கு நான் தெரிவிக்க விரும்புவது சி.பி.எஸ்.இ. கையாள்வது ஏதோ எந்திரங்களை அல்ல, மாணவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் என்பதை அது உணர வேண்டும்.

இனிமேலும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் போக்கை மத்திய அரசு உத்தரவின் பேரில் இயங்கும் சி.பி.எஸ்.இ. மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

நீட் தேர்வு என்கிற அநீதியிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.