டில்லி,

ரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்துள்ளது டில்லி உயர்நீதி மன்றம்.

இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்க கோரி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக டிடிவி தினகரன் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற தாக கூறப்பட்ட புகார் காரணமாக, டில்லி குற்றப்பிரிவு போலீசாரின்  4 நாட்கள் விசாரணைக்கு பிறகு தினகரன் கைது செய்யப்பட்டார். இரட்டை இலையை அதிமுக அம்மா அணிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே கடந்த 19ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு இன்றைக்கு (22ந்தேதி) தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணை மே 26 ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரனின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சுகேஷ் ஜாமின் மனு டிஸ்மிஸ்:

இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  புரோக்கர்  சுகேசின் ஜாமின் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமின் மனுவை டில்லி கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

சுகேஷ் மற்றும் தினகரன் பேசிய ஆடியோ உள்ளிட்ட விவகாரங்கள் நிலுவையில் உள்ளதால் ஜாமின் தர முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.