சென்னை:
ஜல்லிக்கட்டு போராட்டம் கலரமாய் மாறிய விசயத்தில், தமிழக ஆளுங்கட்சிக்குள்ளேயே அதிகார மையம் சதி செய்துள்ளது என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்., “ஜல்லிக்கட்டு தடையை உடைத்ததற்காக அவசர சட்டத்தை கொண்டுவந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், அதற்கு உதவியாக இருந்த பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன்” என்றார்.
ஜல்லிக்கட்டு குறித்த கலவரம் பற்றி அவர் பேசியபோது, “புயல்தான் கொள்ளுமா மையம்? தமிழக அரசுக்குள்ளே அதிகார மையம்! இதுதான் பலரது ஐயம். ஆறு நாட்களாக அமைதியாக நடந்த மாணவர் போராட்டம் இறுதி நாளில் கலவரமானது ஏன்? முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்குள்ளேயே அதிகார மையம் சதி செய்ததா என்பதே கேள்வி” என்றார்.
மேலும் அவர், “சரித்திரம் படைத்த ஜெயலலிதாவின் மரணத்திலே மர்மம் என்றால் கேட்க நாதி இல்லை. நீதியரசர் வைத்தியநாதனே இது குறித்து பல சந்தேகங்களை எழுப்பினார். பாமக நிறுவனர் ராமதாஸும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் இது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்றார்கள். ஆனால் வெள்ளை அறிக்கையும் கொடுக்கவில்லை வெள்ளரிக்காய் அறிக்கையும். இந்த லட்சணத்தில் சட்டமன்றமும் நடக்கிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் கிளப்பியதும், ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக ஆளும் தரப்புக்குள்ளேயே சதியா என்று கேள்வி எழுப்பியதும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு எதிரான கருத்துகளை டி.ஆர். பேச ஆரம்பித்திருப்பதாக கருத இடமிருக்கிறது.