காஞ்சிபுரம்: விபத்தில் சிக்கிய பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அவர்மீது 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுதாக்கல் செய்தார்
. இதனை விசாரித்த நீதிபதி, வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் டிடிஎஃப் வாசனின் யூடியூபை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். நீதிபதியின் கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.