திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது 80 வருட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு 188 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுள்ளது.

கடந்த 1985 ஆம் வருடம் திருப்பதி தேவஸ்தானம் புகழ்பெற்ற திருப்பதி  பக்தர் தல்லபாகா அன்னமாச்சாரியாரின் குடும்பத்தினருக்குச் சேவை மானியமாக 188 ஏக்கர் மற்றும் 32 செண்ட் பரப்பளவு நிலத்தை வழங்கியது.   இந்த நிலம் அவர்களுக்குத் தினமும் திருமலை வெங்கடாஜலபதி கோவியில் வேத பாராயணம் செய்வதற்காக வழங்கப்பட்டது.   இந்த சேவையை அந்தக் குடும்பத்தினர் செய்யும் காலம் வரை நிலத்தை அவர்கள் அனுபவிக்கத் தேவஸ்தானம் உரிமை வழங்கியது.

கடந்த 1925 ஆம்,வருடம் அன்னமாசாரியாவின் குடும்பத்தினர் இந்த சேவையை நிறுத்தி விட்டனர்.  ஆனால் நிலத்தைத் தேவஸ்தானத்துக்குத் திருப்பித் தரவில்லை.  அதற்குப் பதிலாக  உள்ளூர் அரசியல்வாதியான சுப்பா ரெட்டி மற்றும் குரவா ரெட்டியின் குடும்பத்துக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கி உள்ளனர்.  அதன் பிரகு 1927 ஆம் வருடம் அந்த நிலத்தைக் குரவா ரெட்டி தனது குடும்பத்தினர் பெயரில் மாற்றி உள்ளார்.

இதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் 1940 ஆம் வருடம் துணை ஆட்சியரிடம்  ஒப்பந்தப்படி அன்னமாச்சாரியார் குடும்பத்தினர் சேவையைச் செய்யாததால் தேவஸ்தானத்துக்குத் திருப்பி அளிக்கக் கோரிக்கை விடுத்தது.   துணை ஆட்சியர் இந்த நிலம் தேவஸ்தானத்தை சேர்ந்தது என முடிவு அளித்தார்.  ஆனால் அன்னமாசாரியா மற்றும் குரவா ரெட்டியின் குடும்பத்தினர் தங்களுடையது என வழக்கு தொடர்ந்தனர்.   இந்த வழக்கு பல காலமாக நடந்தது.

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சித்தூர் நீதிமன்ற நீதிபதி சேஷகிரி ராவ் அளித்த தீர்ப்பில் இந்த நிலத்துக்கும் அன்னமாச்சாரியார் மற்றும் கருவ ரெட்டி குடும்பத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்த நிலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தமானது எனவும் கூறப்பட்டுள்ளது.    இந்த தீர்ப்பின் மூலம் 80 ஆண்டுகளுக்கும் மேலான தேவஸ்தானத்தின் சட்டப்போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.  இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1000 கோடி ஆகும்.