ஜப்பானின் வடகிழக்கு பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது, இதையடுத்து கடலிலிருந்து ஒரு மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் எழும்பி வந்து அப்பகுதியில் இருந்த ஃபுகுஷிமா அணு உலையை தாக்கி சிறிய அளவில் சேதம் விளைவித்தன.

sendai_station

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான செண்டாய் நகரத்தின் இரயில் நிலையத்தில் பயத்தில் உறைந்திருக்கும் பயணிகள் (Photo Credit: Hindustan Times)

ஜப்பானின் டோக்கியோ நகரில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவுகோலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான செண்டாய் நகரம் ஃபுகுஷிமா அணு உலைக்கு அப்பால் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதையடுத்து ஃபுகிஷிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுமார் மூன்று மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் எழும்பி கடற்கரை பகுதியை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இது அப்பகுதி மக்களை அச்சத்தில் உறையவைத்தது.
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவாக 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலையில் நீர் குளிர்ச்சி கட்டமைப்பின் மூன்றாவது உலை செயற்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய சுனாமியால் ஃபுகுஷிமா அணு உலை பலத்த சேதத்துக்குள்ளானது. அதன் விளைவாக ஃபுகிஷிமா அணு உலையில் இருந்த 3 ரியாக்டர்கள் உருகியதும் சுமார் 18 ஆயிரம் பேர் இறந்ததும், மாயமானதும் குறிப்பிடத்தக்கது.