புதுச்சேரி:

கேரளாவை போல புதுச்சேரியிலும்  பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

கர்நாடக சட்டமன்ற  தேர்தலுக்கு பிறகு கடந்த  16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை  வரலாறு காணாத அளவு உயர்ந்து வந்தது.  தற்போது கச்சா எண்ணையின் விலை குறைவாக இருந்த நிலையில் நேற்று லிட்டர் ஒன்றுக்கு 1 பை குறைந்த நிலையில் இன்று 7 பைசா குறைந்துள்ளது.

விலை ஏற்றப்படும்போது மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 பைசா முதல் 2 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்திய எண்ணை நிறுவனங்கள், தற்போது கச்சா எண்ணை விலை குறைந்துள்ளபோது, வெறும் 1 பைசா, 7 பைசா என குறைத்து வருவது பொதுமக்களின் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், வரும் ஜூன் 1ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை, எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்துள் ளதை விட 1 ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், கேரளாவை போல புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.