சென்னை: சென்னையில் இன்று நடந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய வணிக நீதிமன்றம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி என்.வி.ரமணா, தமிழகஅரசை பாராட்டியதுடன், உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக கட்டப்பட 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, வணிக வழக்குகளை விசாரிக்க சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது பெருமைக்குரியது; மக்களின் மனசாட்சி என்ற முறையிலேயே அவரது தீர்ப்புகளும், உரைகளும் உள்ளது. மேலும், நீதி நெறிமுறைகளின்படி சட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் ஆட்சி வழங்கி வருகிறோம். தமிழக அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னையில் உயர்நீதிமன்ற கிளைஅமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உரையாற்றிய தலைமைநீதிபதி என்.வி.ரமணா, நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், சிறுவயதில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடந்த மொழிப் போராட்டம் நன்கு நினைவில் உள்ளது. மொழி- கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் தமிழர்கள் முன்னணியில் உள்ளனர். தமிழ்நாடு பார் கவுன்சில்தான் நீதித்துறையின் அனைத்து விவகாரங்களையும் முதலில் முன்னெடுத்து செல்கிறது.
சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்து இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும்போது கண்மூடி சட்டத்தை மட்டும் நீதிபதிகள் சார்ந்திருக்கக் கூடாது. மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
ஒருவர் நீதித்துறையில் வருவதற்கு மொழி, இனம், சாதி, மதம், என எதுவும் தடையாக இருக்கக்கூடாது. பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் நீதிபதிகளால்தான் மக்கள் பிரச்சினைகளை புரிந்து தீர்க்க முடியும் என்று கூறியதுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரரேஷ் பேசும்போது, “வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இன்று வரலாற்றில் முக்கிய தினமாகும்”என்றார்.
மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசும்போது, “சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. சாதனை படைக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு பார் கவுன்சில் இன்று அரசோடு சேர்ந்து ஒரு மிகப்பெரிய உதவியை வழக்கறிஞர்களுக்கு செய்ய முன் வந்து இருக்கிறது. எனவே அனைவருக்கும் என்னுடைய நன்றி” என்றார்.
இறுதியில் இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.