இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க இரண்டு வாரகாலம் அவகாசம் வேண்டியிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், இருதரப்பும் பலமாக மோதிவருகின்றன.
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கடந்த இரண்டுநாட்களாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஈரான், இஸ்ரேலின் பல நகரங்கள் மீது குண்டுமழை பெய்து வருகிறது.
இதில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு அருகில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்கள் மீதும் குண்டு விழுந்துள்ளது.
அதேவேளையில் ஈரான் உச்ச தலைவர் கமேனியை ஒழித்துக்கட்டுவது ஒன்றே இலக்கு என்று செயல்பட்டு வந்த இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்க ராணுவத்தின் ஆதரவை நம்பியுள்ளது.
இதையடுத்து ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், போர் துவங்கிவிட்டதாகக் கூறி இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளதோடு அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்க ஈரான் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க மேலும் இரண்டு வார காலம் ஆகும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் அதேவேளையில் தனது ராணுவ பலத்தை பயன்படுத்த பயப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேலுடன் அமெரிக்கா இன்னும் ஓரிரு நாளில் கைகோர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளையில், “டிரம்ப் இஸ்ரேலுடன் சேர விரும்புகிறாரா இல்லையா என்பது முற்றிலும் அவரது முடிவு” என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரானின் அனைத்து அணுசக்தி நிலையங்களையும் தாக்குவோம். அதைச் செய்யும் திறன் எங்களிடம் உள்ளது, நாங்கள் எங்கள் அனைத்து இலக்குகளையும் அடைவோம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த போரில் அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா அல்லது இருநாடுகளும் அதன் இலக்கை எட்டும் வரை போரிடட்டும் என்று வேடிக்கை பார்க்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.